ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜீலோங்கில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் - மெல்போர்ன் ரெனகட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் முதல் வரிசை வீரர்கள் சாம் ஹார்பர் 39, கேப்டன் ஆரன் பின்ச் 29, ஷான் மார்ஷ் 42 என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைக் குவித்தது.
பின்னர் சிட்னி தண்டர்ஸ் அணி சேஸிங்கை தொடங்கியபோது தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்து அட்டகாசமான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய கவாஜா 66 ரன்கள் (46 பந்துகள், எட்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த கேப்டன் பெர்குசன் 4 ரன்னில் ஆட்டமிழந்து சொதப்பினாலும் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து சிட்னி அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சிட்னி அணி 19.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனால் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள சிட்னி தண்டர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.