ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான இரண்டாவது லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது. இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, கமேரோன் க்ரீன் 36, கேப்டன் மிட்சல் மார்ஷ் 32 ரன்கள் அடித்தனர். சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் டாம் கரன் மூன்று, பென் மனென்டி (Ben Manenti), பென் வார்ஷூய்ஸ் (Ben Dwarshuis) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, 132 ரன்கள் இலக்குடன் களமறிங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலப் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
மறுமுனையில், அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த டேனியல் ஹியூஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் ஜோஷ் ஃபிலிப் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு 31 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஜோஷ் ஃபிலிப் சிக்சர் அடித்து ஆட்டத்தை ஃபினிஷ் செய்தார்.