இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 84 ரன்கள் விளாசிய அவர் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை ஜெரார்டு நியூசிலாந்து ரக்பி அணியில் ஆடியுள்ளார். பின்னாளில் அவர் இங்கிலாந்து ரக்பி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் இங்கிலாந்திலேயே குடியேறினார்.
இதனால் தனது பன்னிரெண்டு வயதிலிருந்து இங்கிலாந்தில் வசித்துவந்த ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையும் இங்கிலாந்திலேயே தொடங்கி இங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடித்தார். ஆனால் மீண்டும் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சிற்கு சென்ற ஸ்டோக்ஸின் பெற்றோர்கள் தற்போது வரை அங்கு வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், மிகப்பெரிய சாதனை புரிந்தவர்களுக்கு நியூசிலாந்தில் அளிக்கப்படும் உயரிய விருதான 'நியூசிலாண்டர் ஆஃப் தி இயர்' விருதிற்காக ஸ்டோக்ஸின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த விருதை அளிக்கும் தலைமை நீதிபதி கேம்ரான் பென்னெட் கூறுகையில், பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்காக விளையாடவிட்டாலும் அவர் கிரைஸ்ட்சர்ச்சில் பிறந்தவர் என்பதாலும், அவருடைய பெற்றோர்கள் இங்கு வசிப்பதாலும் அவர் நியூசிலாந்து நாட்டவர் என்ற அடிப்படையில் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பென் ஸ்டோக்ஸிற்கு இங்கிலாந்தின் நைட்-ஹூட் விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது நியூசிலாந்தின் விருதுக்கும் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.