நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று முதன்முறையாக சாம்பியன் மகுடத்தை சூடியது. அப்போட்டியில் 241 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது தனது பொறுப்பான ஆட்டத்தால் பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ரன்களைக் குவித்தார்.
அதன்பின் சூப்பர் ஓவரிலும் சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
உலகக்கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணி அதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்பட்டார். சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 441 ரன்கள் குவித்த ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டியிலும் தடம்பதித்தார்.
அதிலும் குறிப்பாக லீட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில தனி ஒருவனாகப் போராடி 135 ரன்கள் விளாசியதோடு தனது அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். இதனால் அவரை இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஹீரோவை போன்றே பார்த்தனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களால் தேர்வு செய்யப்படும் பி.சி.ஏ. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு பென் ஸ்டோக்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக சைமன் ஹார்மர், ரியன் ஹிக்கின்ஸ், டாம் ஷிப்லி உள்ளிட்டோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், "இந்த விருதை பெற்றது மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில் இந்த விருதை நான் பெறுவதற்காக வாக்களித்தவர்கள் என்னைப் போன்ற கிரிக்கெட் வீரர்கள்தான். இதனால் இது எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கிறேன்" என்றார்.
மேலும் 2019 ஆண்டு உலகக்கோப்பையை வென்றதையும் ஆஷஸ் தொடரை சமன் செய்ததையும் நினைத்து தனிப்பட்ட முறையிலும் ஒரு அணி வீரனாகவும் பெருமைகொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், பி.சி.ஏ. சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது கிறிஸ் வோக்ஸிற்கும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது இங்கிலாந்து அணியின் சோபி எக்சல்ஸ்டோனுக்கும் வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த இளம் வீரருக்கான விருது சோமர்செட் அணியின் டாம் பேன்டனுக்கு வழங்கப்பட்டது.