கோவிட்-19 பெருந்தோற்று காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக அனைத்து வகையான விளையாட்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரும் தற்போது ஒத்திவைக்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள பல நாடுகளும் அனுமதி வழங்கியுள்ளன. அந்தவகையில் இந்தியாவும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வீரர்கள் தங்களது பயிற்சிகளை தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதனால் வருகிற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வீரர்கள் தங்களது பயிற்சிகளை தொடங்குவர் என்ற தகவலும் வெளியாளியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்கள் முழுவதும் வீரர்கள் தங்களது பயிற்சிகளை தொடங்குவது உறுதியாகியுள்ளது. மேலும் வீரர்களின் மனநிலை, உடற்தகுதி ஆகியனவற்றையும் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டி வருகிறோம்.
அதனால், வீரர்கள் தங்களது பயிற்சிகளுக்கு திரும்புவது மிகவும் அவசியமாக உள்ளது. ஒருசில வீரர்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் அவர்கள் தமது அணியினருடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளவது அவர்களின் பயிற்சிக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.