தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நியூசிலாந்தை அப்செட் செய்து இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் வங்கதேசம்! - 19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Bangladesh beat NZ by 6 wickets to set up final against India in U19 WorldCup
Bangladesh beat NZ by 6 wickets to set up final against India in U19 WorldCup

By

Published : Feb 6, 2020, 11:58 PM IST

தென் ஆப்பிரிக்காவில் 13ஆவது யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதின. பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

நியூசிலாந்து - வங்கதேசம்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பெக்ஹாம் வீலர் க்ரின்வால் 75, நிக்கோலஸ் லிட்ஸ்டோன் 44, ஃபெர்கஸ் லீல்மன் 24 ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மூன்று, ஷமிம் ஹோசைன், ஹசன் முரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தவ்ஹித் ரிதாய்

இதைத்தொடர்ந்து, 212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அணியின் தொடக்க வீரர்களான பர்விஸ் ஹோசைன் 14 ரன்களிலும், தன்சித் ஹசன் மூன்று ரன்களிலும் ஆட்டமிழக்க வங்கதேச அணி 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஜோடி சேர்ந்த மகமதுல் ஹசன் ஜாய் - தவ்ஹித் ரிதாய் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

மகமதுல் ஹசன் ஜாய் - ஷஹதத் ஹோசன்

இந்த ஜோடி 78 ரன்களை சேர்த்த நிலையில், தவ்ஹித் ரிதாய் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷஹதத் ஹோசனையுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய சிறப்பாக பேட்டிங் செய்த மகமதுல் ஹசன் ஜாய் சதம் விளாசினார். இதனால், வங்கதேச அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைபட்ட நிலையில், அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில், வங்கதேச அணி 44.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டை இழந்து 215 ரன்களை எட்டியது. ஷஹதத் ஹோசன் 40 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதனால், வங்கதேச அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி யு19 உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் சதம் விளாசி ஆட்டத்தை மாற்றிய மகமதுல் ஹசன் ஜாய் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதைத்தொடர்ந்து, வரும் 9ஆம் தேதி பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணியுடன் வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில், இந்தியா ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது வங்கதேச அணி முதல்முறையாக கோப்பையை வெல்லுமா என்பது 9ஆம் தேதிதெரிந்துவிடும்.

இதையும் படிங்க:'நிலையில்லா கூட்டத்தில் நிலைக்கும் பெயர் யஷஸ்வி ஜெய்ஷ்வால்'

ABOUT THE AUTHOR

...view details