ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை மகளிர் அணி மூன்று பேட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடெரின் கடைசி டி20 போட்டியானது இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிஷா ஹீலி, பெத் மூனி ஆகியோர் அதிரடியானத் தொடக்கத்தை தந்தனர். இதில் பெத் மூனி 14 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஹீலி சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். இவர் இந்த சதத்தை 46 பந்துகளில் கடந்து ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிவேக டி20 சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அலிஷா ஹீலி 61 பந்துகளில் 19 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 148 ரன்களை அதிரடியாக குவித்தார்.