கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வைரஸ் எளிதாகப் பரவும் என்பதால் பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது.
கொரோனா வைரஸால் இந்தத் தொடரின் போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களின்றி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தத் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மார்ச் 24 முதல் மார்ச் 29ஆம் தேதி வரை இவ்விரு அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸை பரவவிடாமல் தடுக்க நியூசிலாந்து அரசு பயணத்தில் புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து வீரர்கள் அவர்களது நாட்டிற்குத் திரும்புமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. கொரோனா வைரஸால் ஆஸ்திரேலியாவில் இதுவரை 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மறுமுனையில், நியூசிலாந்தில் ஆறு பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நியூசிலாந்து வீரருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!