ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிரெட் லீ, ஜான்சனுக்கு பிறகு தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பீட்டர் சிடில். 2008இல் இந்தியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சிடில், சச்சினை அவுட் செய்து தனது முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர், ஒருநாள், டி20 போட்டிகளைக் காட்டிலும் டெஸ்ட் போட்டிகளிலேயே தனது சிறப்பான பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2010 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அவரது பிறந்தநாளான நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. பிறந்தநாளன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் அலெஸ்டர் குக், மாட் பிரையர், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அமர்க்களப்படுத்தினார்.
இதன்மூலம், டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 9ஆவது வீரர் என்ற பெருமையை சிடில் பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக ஏராளமான போட்டிகளில் வென்று கொடுத்த இவர், பெட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் ஆகியோரது வருகையால் 2016 முதல் 2018வரை இவருக்கு அணியில் இடம்கிடைக்காமல் போனது. இதையடுத்து, சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்பெற்று மூன்று போட்டிகளில் விளையாடினார்.
நியூசிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் இன்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் நான்காம் ஆட்டநாள் இன்று தொடங்குவதற்கு முன்னதாக, தான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பீட்டர் சிடில் அறிவித்தார். 35 வயதான இவர் இப்போட்டியில் விளையாடவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 221 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 13ஆவது இடத்தில் உள்ளார். மேலும் இவர் இதுவரை 22 ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:' இன்னொரு தோனி கிடைப்பது கடினம் ' - கங்குலி