இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 54 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், நடராஜன், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன் பின்னர் இமால இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அதிரடியில் மிரட்டிய விராட் கோலி இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ஷிகர் தவான் இணை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளமிட்டனர்.
இதன் மூலம் ஆறு ஓவர்கள் முடிவில் இந்திய அணி 55 ரன்களையும் குவித்திருந்தது.
இதையடுத்து 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதுமின்றியும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு சிக்சர்களைப் பறக்க விட்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் 20 ரன்களில் பாண்டியா விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 85 ரன்களில் விராட் கோலியும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 85 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணித்தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-2 என்ற கணக்கிலும் நிறைவு செய்தது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: வெற்றிப்பாதையை தக்கவைப்பது யார்? பெங்களூரு எஃப்சி vs நார்த் ஈஸ்ட் யுனைடெட்!