இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டவாது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின்போது ஆஸி., அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயமடைந்து, போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக ஆஸி., கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும் அவருக்கு மாற்று வீரராக டி ஆர்சி ஷார்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வார்னர் இடத்தில் தான் களமிறங்க தயாராகவுள்ளதாக ஆஸி., அணியின் நட்சத்திர நடுவரிசை வீரர் மார்னஸ் லபுசாக்னே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்க நான் தயாராகவுள்ளேன். அது எனக்கு கிடைக்கும் மிகப்பெறும் வாய்ப்பு. இருப்பினும் போட்டிக்கான அணி எவ்வாறு தேர்வுசெய்யப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் நான் இன்னிங்ஸைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே, 60 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ஆஸி., அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேப்டன்சியே புரியலங்கறேன்... கோலியை மீண்டும் விளாசும் கம்பீர்