ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும்பட்சத்தில் டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி & கோ மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தாலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது.
அந்த வரிசையில் நாளை நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கிறது.
தவான், கோலி, பாண்டியா, சாம்சன், கே.எல். ராகுல் என பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவது இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க ஏதுவாக அமைந்துள்ளது. அதிலும் கடந்த போட்டியில் தவான், கோலி, ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி 190 ரன்களை சேஸ் செய்து அசத்தியது.
அதேசமயம் பந்துவீச்சாளர்கள் வரிசையில் அறிமுக வீரர் ‘சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்’ நடராஜனின் துல்லியமான பந்துவீச்சுத்திறன் எதிரணியினரின் ரன் வேட்டைக்கு ஒரு தடையாக அமைந்துள்ளது. அதிலும் அவர் கடந்த போட்டியில் ரன்களைக் கட்டுப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆனால் பிற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரிவழங்குவதன் காரணமாக இந்திய அணி சேஸிங்கில் சற்று கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது. அதனால் நாளை ஆட்டத்தில் பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.