ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்திருந்தது.
முதல் இன்னிங்ஸில் சறுக்கிய இந்தியா
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்குத் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். தொடர்ந்துவந்த புஜாராவும் 44 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த விராட் கோலி, 74 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
2ஆம் நாள் ஆட்டத்தில் சுருண்ட இந்தியா
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆட்டம் தொடங்கிய மூன்றே ஓவர்களில் இந்திய அணி மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தடுமாறும் ஆஸி.,
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் - ஜோ பர்ன்ஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேத்யூ வேட், பும்ரா வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸும் 8 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை இழந்து 35 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் லபுசாக்னே 16 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:மல்யுத்த உலகக்கோப்பை: ஃப்ரீஸ்டைல் பிரிவில் ரஷ்யாவுக்கு 4 தங்கம்!