இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் 2016ஆம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், இந்தியா வீரர்களைப் பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுவது பணம் பெறுவதற்காகவே எனப் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதில், ''சேவாக் தலையில் உள்ள முடியோடு ஒப்பிடுகையில், என்னிடம் அதிகமான பணம் உள்ளது. நான் கிரிக்கெட்டில் 15 வருடங்களாக சிறப்பாகச் செயல்பட்டதால்தான், என்னைப் பின்தொடர்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எனக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்காக இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், விமர்சனம் செய்யாமல் இருந்ததில்லை. இந்திய அணி சிறப்பாக விளையாடாதபோது இந்திய அணியைப் புகழ்ந்த ஒரு பாகிஸ்தான் யூ ட்யூப் சேனலைக் காட்டுங்கள். பார்க்கலாம். ரமிஸ் ராஜா, அப்ரிடி எனப் பல பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியைப் பாராட்டுகின்றனர். ஏனென்றால் இந்திய அணி தான் தற்போதைய சூழலில் சிறப்பாகச் செயல்படுகிறது.
நாங்கள் பாராட்டுவதால் என்ன ஆகப்போகிறது. எனக்குத் தோன்றியதைக் கூறுகிறேன். 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டை ஆடியிருக்கிறேன். அதனால் விமர்சனம் செய்கிறேன். யூ ட்யூப் சேனலில் பேசுதால் ஒன்றும் நான் ரசிகர்களிடையே பிரபலம் ஆகவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்'' எனப் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸி.யில் உள் அரங்கு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!