தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்! - வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் தொடர் முடிவுகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான  இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம், அந்த அணி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

WI

By

Published : Nov 10, 2019, 12:24 PM IST

கிரிக்கெட் போட்டிகளில் 1970,80-களில் கொடிக்கட்டி பறந்த கரீபியன்ஸ் என்ற அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக ஒருநாள் தொடரில் அந்த அணியின் ஆட்டத்திறன் மிகவும் கவலையளிக்கும் வகையிலேயே இருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர், இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்தது. இதனால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜேசன் ஹோல்டரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நட்சத்திர ஆல்ரவுண்டர் பொலார்டை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்தப்பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணி லக்னோவில் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 67 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன் உல்-ஹக் மூன்று, முகமது நபி, ரஷித் கான், ஜாவித் அஹ்மாதி, முஜிப்-உர்-ரஹ்மான், ஷராஃபுதீன் அஸ்ரஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஆட்டநாயகன் விருதை வென்ற நிகோலஸ் பூரான்

இதைத்தொடரந்து, 248 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இறுதியில் அந்த அணி 45.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியில் 67 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு துணையாக இருந்த நிகோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. 2014இல் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு அந்த அணி விளையாடிய 24 தொடர்களில் 19 ஒருநாள் தொடர், இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தோல்வி அடைந்தது. இரண்டு தொடர் சமனிலும், ஒரு தொடர் மழையால் ரத்தும் ஆகின.

பொலார்டின் கேப்டன்ஷிப்பால் தற்போது எழுச்சி பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் விண்டேஜ் ஃபார்முக்கு திரும்புமா என்பது அந்த அணி வீரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே உள்ளது. இதனிடையே ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details