ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவின் லக்னோவில் நடைபெற்றுவருகிறது. இதில், முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கரிம் ஜனத், ஹஸ்ரதுல்லாஹ் சஸாய் ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் கரிம் ஜனத் இதைத்தொடர்ந்து, 148 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆப்கானிஸ்தான் வீரர் கரிம் ஜனத் ஒற்றை ஆளாக டீல் செய்தார். தனது அபாரமான பந்துவீச்சினால் அவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்தார் கரிம் ஜனத்.
எவின் லீவிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கேப்டன் பொல்லார்ட், ரூதர்ஃபோர்டு ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதால் இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கரிம் ஜனத் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.