ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, பிரிஸ்பேன் ஹீட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிரைக்கர்ஸ்
அதன்படி களமிறங்கிய அடிலெய்டு அணியின் தொடக்க வீரர் வெதர்லேண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பிலீப் சால்ட் - ரென்ஷா இணை அதிரடி ஆட்டத்தை வெளீப்படுத்தி சிறப்பான அடித்தளத்தை அமைத்துதந்தனர்.
பின்னர் 25 ரன்களில் சால்ட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வெல்ஸ் அதிரடியாக விளையாடி 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்தது.
தொடக்கத்தில் அதிர்ச்சியளித்த ஹீட்
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிகும் வகையில் சாம் ஹெசல்ட், மேக்ஸ் பிரைண்ட், சிமோன், டேனியல், டாம் கூப்பர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
பின்னர் 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஜிம்மி பெர்சான் இறுதிவரை போராடி 69 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பிரிஸ்பேன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே எடுத்தது.
அடிலெய்ட் த்ரில் வெற்றி
இதன் மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை இறுதிவரை கொண்டு வந்த பிரிஸ்பேன் அணியின் கேப்டன் ஜிம்மி பெர்சான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் போட்டி, ஐசிசி முடிவுக்கு பிசிசிஐ ஆதரவு?