வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதில் நார்த் பெங்கால் அணி பேட்டிங்கின்போது 27 சிக்சர்களையும், டேலண்ட் ஹண்ட் அணி 21 சிக்சர்களையும் விளாசின. இதுகுறித்து கிரிக்கெட் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சையத் சலி ஆசப் பேசுகையில், ''வங்கதேசத்தின் உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து பார்த்து வருபவன் நான். இந்தப் போட்டியைப் போல வேறெந்த போட்டியும் இதுவரை நடந்ததே இல்லை'' என்றார்.
ஏற்கனவே வங்கதேசத்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் எப்போதும் சரியான முடிவுகள் எட்டப்படாது, மேட்ச் ஃபிக்சிங் மிகவும் எளிதாக நடைபெறும் என ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 2017ஆம் ஆண்டு வங்கதேச உள்ளூர் போட்டியின்போது வைட், நோ - பால்கள் மூலம் எதிரணிக்கு ஆதரவாக 92 ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளருக்கு 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
வங்கதேச உள்ளூர் கிரிக்கெட் சில நாள்களுக்கு முன்னதாக முன்னாள் வங்கதேச கிரிக்கெட் நிர்வாக தலைவர் சபீர் ஹொசைன் பேசுகையில், ''வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டுகளில் அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நிரம்பியுள்ளன'' என்றார். அதேபோல் நட்சத்திர வீரர் ஷமிப் அல் ஹசன் பேசுகையில், ’’வங்கதேசத்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் முன்னதாக முடிவுகள் தீர்மானிக்கப்படும்'' எனக் கூறியிருந்தார். இதனால் இந்தப் போட்டியிலும் மேட்ச் ஃபிக்சிங் நடந்துள்ளதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: யு-19 உலகக் கோப்பை - ஆஸியை துவம்சம் செய்த இந்தியா