கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு சுய சரித்திரத்தை உருவாக்கி, அதிலுள்ள பக்கங்களில் எல்லாம் சாதனை மைல் கற்களை பதித்து, இரு தசாப்தங்களாக கிரிக்கெட் உலகை கட்டி ஆண்ட ஜாம்பவான் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட் உலகில் எப்போதும் வளரும் வீரர் ஒருவரைப் பார்த்து இவருக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சரியான வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்ற பேச்சு தொன்றுதொட்டு வழக்கத்தில் உண்டு. இந்த சொல்லாடல் என்பது கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு கேப்டனின் முதல் கடமையே ஒரு வீரரின் திறமையை நன்கு அறிந்து, அவருக்கு சரியான இடத்தில் வாய்ப்பை வழங்கி சிறந்த வீரராக மாற்ற வைப்பதுதான்.
அப்படி 1990களின் ஆரம்பக்கட்டத்தில் நல்ல பேட்ஸ்மேனாக அறியப்பட்ட டெண்டுல்கர், ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் பெரும்பாலும் ஐந்தாவது அல்லது ஆறாவது வரிசையில் மட்டுமே பேட் செய்துவந்தார்.
ஆனால், 1994ஆம் ஆண்டு ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிகழ்ந்தது அந்த மேஜிக். அந்தப் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக அஜய் ஜடேஜாவுடன், டெண்டுல்கர் களத்தில் இறங்கினார்.
முதல் வாய்ப்பிலேயே இனி வரும் காலங்களில் ஓப்பனிங்கில் நான்தான் முதல்வன் என்று கிரிக்கெட் உலகிற்கு சொல்வதுபோல் ஒரு இன்னிங்ஸ் ஆடினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டேனி மோரிசன், கிறிஸ் பிரிங்கில், கிறிஸ் ஹாரிஸ் என முன்னணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். கட் ஷாட், லாஃப்ட், ஸ்ட்ரைட் டிரைவ் என பந்தை விருந்தாக்கும் விதமாக ஷாட்டுகளை வெளுத்துக்காட்டி ரன் வேட்டையை அரங்கேற்றினார். தான் ஆடிய ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஏற்றவாறு மணிக்கட்டும், ஃபுட் ஒர்க்கை மிக நேர்த்தியாக கையாண்டு அப்லாஸ் அள்ளினார்.