சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (பிப்.13) தொடங்கியது. போட்டிகள் நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று பிரதான சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.
4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இப்போட்டியில், 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். உலகத் தரவரிசையில் 108வது இடத்தில் இருக்கும் சீன தைபே வீரர் சுன் சின் செங், முதல் சுற்றில் குரோஷிய வீரர் நினோ செர்டாருசிச்சை சந்திக்கிறார். இங்கிலாந்தின் பெனிஸ்டன் ரையான், ஆஸ்திரியாவின் செபாஸ்டின் அப்னெர், இத்தாலியின் லுகா நார்டி ஆகிய முன்னணி வீரர்களும் களம் காண்கின்றனர். முதல் நாளான இன்று 11 போட்டிகள் நடைபெறுகின்றன.