மிர்பூர்:இந்தியா-வங்தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் இன்று (டிசம்பர் 4) நடந்தது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய வீரர்கள் 41.2 ஓவர்களில் 186 ரன்களை எடுத்தனர். கே.எல். ராகுல் 70 பந்துகளுக்கு 73 ரன்களை எடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளுக்கு 27 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 39 பந்துகளுக்கு 24 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அந்த வகையில் 187 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேச வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அவருடன் களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் நிதனமாக விளையாடி 63 பந்துகளுக்கு 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவதாக களமிறங்கிய அனாமுல் ஹக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 29 ரன்களுடன் வெளியேறினார். இதற்கு அடுத்த வந்த பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனிடையே மெஹிதி ஹசன் நிதனமாக விளையாடி ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்.
46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்து வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. மறுப்புறம் பந்துவீச்சில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல குல்தீப் சென், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஒருநாள் தொடரின் முதல்போட்டியில் வெற்றி பெற்று வங்கதேச அணி முன்னிலையை உறுதிசெய்துள்ளது.
இதையும் படிங்க:திருமணமா..? காதலியுடன் போட்டோ வெளியிட்ட டூட்டி சந்த்..!