லண்டன்:ஐசிசியின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் இறுதிப் போட்டி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி, நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்த போட்டிகளின்படி, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தன.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவித்தது, இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அப்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தது சர்ச்சையானது. அவரது கை தரையோடு ஒட்டியிருந்த நிலையில், விரல்கள் பந்தை பற்றியிருப்பது போல தோன்றுவதாகக் கூறி மூன்றாவது நடுவர் சுப்மன் கில் அவுட் என்று அறிவித்தார். இந்த முடிவில் அதிருப்தியடைந்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 47 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 78 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால், 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறத் தொடங்கியது.
ரஹானே 108 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் ரன் எடுக்காமலேயே வெளியேறினார். அதன் பிறகு வந்த கே.எஸ்.பரத் 41 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ், முகம்மது சிராஜ் ஆகியோர் தலா ஒரு ரன்னில் வெளியேறினர். 63.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 234 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்றது. கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: சேலம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' - ஜூன் 23ம் தேதி திறப்பு!