சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நாளை முதல் (ஜன. 12) முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காங் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடக்கவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்றுள்ள 824 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின், வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஸ்பெயினின் பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்குச் சரியான உணவுகூட கிடைப்பதில்லை என்ற குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மரின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விளையாடுவதற்குத் தயாராக இருக்க எங்களுக்குச் சிறந்த உணவு தேவை. ஏனெனில் கடினமான சூழ்நிலையில் நாங்கள் விளையாட்டில் பங்கேற்க இருக்கிறோம், இதனால் நாங்கள் எங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்வது அவசியம். அதிலும் எனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சினை காரணமாக நான் சிறப்பு உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இந்திய வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் முறையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: முர்ரேவின் அடுத்தடுத்த கோல்களால் கேரளா பிளாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி