2019ஆம் ஆண்டுக்கான ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர், டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பானின் கென்டோ மொமோடாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதைத்தொடர்ந்து, முதல் செட் போட்டியில், சாய் பிரனீத், கென்டோவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து ஆடினாலும் 18-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஜப்பான் வீரரிடம் சாய் பிரனீத் தோல்வி - Sai Praneeth
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் தோல்வி அடைந்தார்.
பின், இரண்டாவது செட்டில் கென்டோ ஆதிக்கம் செலுத்தியதால், 12-21 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதன்மூலம், சாய் பிரனீத் 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். முன்னதாக, இவ்விரு வீரர்களும் கடைசியாக சிங்கப்பூர் ஓபன் தொடரில் மோதினர். அதில், சாய் பிரனீத் கென்டோவிடம் தோல்விக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் மூலம், இவ்விரு வீரர்கள் இதுவரை ஐந்து போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், இறுதி மூன்று போட்டிகளில் கென்டோவின் ஆதிக்கம் தான் தொடர்கிறது.