நாடு முழுவதும் நவராத்திரி விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த திருவிழாவை ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்றவாறு பொதுமக்கள் கொண்டாடுகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களின்போது கடைசி இரண்டு தினங்களுக்கு முன்பு பதுக்கம்மா என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பதுக்கம்மா நிகழ்ச்சி என்பது தமிழ்நாட்டில் பெண்கள் முளைப்பாரிகளை வைத்து அதைச்சுற்றி கும்மிபாட்டு பாடுவதைப்போன்ற ஒரு நிகழ்ச்சியாகும். அதேபோன்று தெலங்கானாவில் ஒரு தட்டில் கலசம் வைத்து அதை பூக்களால் அலங்கரித்து அதைச் சுற்றிலும் பெண்கள் கும்மிப்பாட்டைப்போன்ற பாட்டுக்கு நடனமாடுவர்.
கும்மிப் பாட்டுக்கு நடனமாடிய பி.வி. சிந்து இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் இந்த பதுக்கம்மா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உசேன் சாகர் ஏரிக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். மாநில சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அவரது மனைவி, மகள் ஆகியோருடன் பங்கேற்றார். மேலும் அந்த பகுதியில் நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அங்கு வந்திருந்த இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் கும்மி பாட்டுக்கு நடனமாடினார். இவர் சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.