சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் சென் யூ ஃபெய் (Chen Yu Fei) உடன் பலப்பரீட்சை நடத்தினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
#BWFWorldChampionship: 42 ஆண்டுகால வரலாற்றை மாற்றுவாரா பி.வி. சிந்து?
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை பி. வி. சிந்து இம்முறை தங்கப்பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த வெற்றியின்மூலம், சிந்து இந்தத் தொடரில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 2017, 2018இல் தங்கப்பதக்கத்தை நூலளவில் தவறவிட்ட இவர், இம்முறை அதை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுமட்டுமில்லாது, 42 ஆண்டுகளாக இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் இத்தொடரில் தங்கம் வென்றதில்லை என்ற வரலாற்றை சிந்து நாளை மாற்றுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இன்டனோன் (Ratchanak Intanon), ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். இதில், வெற்றிபெறும் வீராங்கனையுடன் சிந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளார்.