தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளில் தயாரிப்பாளர்களுக்கு பங்களிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கோரிக்கைகளுக்கு உடன்படாத பட்சத்தில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படாது என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே போலவே விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து கியூப் கட்டணங்களை திரையரங்கு உரிமையாளர்கள் கட்டவேண்டும். அது அவர்களுடைய கடமை என்று விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கமும் விநியோகஸ்தர்கள் சங்கமும் ஒன்றுகூடி திரையரங்கு உரிமையாளர்கள் மீது பல்வேறு கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியமிடம் கேட்டோம். நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரியுள்ள கோரிக்கைகள் நியாயமற்றது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சுப்பிரமணியம். அவர் கூறுகையில், ”கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து திரையரங்கத்தைக் கட்டியிருக்கிறோம். அதில் போடப்படும் விளம்பரங்களில் அவர்கள் பங்கு கேட்கிறார்கள். அதை எப்படி எங்களால் கொடுக்க முடியும்.
அவர்கள் படங்களை நாங்கள் திரையிடுவதால் தான் எங்களுக்கு விளம்பரம் வருவதாகக் கூறுகிறார்கள். அது உண்மை என்றாலும் கூட ஒரு திருமண மண்டபத்தில் (அ) பார்கில் திரைப்படத்தை திரையிட்டால் அதற்கு விளம்பரம் கிடைக்குமா? அதுமட்டுமல்லாமல் விளம்பரத்தில் நாங்கள் விழுக்காடு படி பணம் கொடுத்தால், அதைப் போல சாட்டிலைட் ரைட்ஸ் ஓடிடி வியாபாரத்தில் எங்களுக்கு அவர்கள் பங்கு தருவார்களா?. அவர்கள் பணத்தை முதலீடு செய்து படம் எடுப்பதால் எங்களுக்கு தர முடியாது என்று தான் கூறுவார்கள். அப்படியிருக்க, திரையரங்கு விளம்பரத்தில் அவர்கள் பங்கு கேட்பது நியாயம் இல்லாத ஒன்று” என்றார்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் வரும் வருமானத்தில் பர்சன்டேஜ் கேட்கிறார்கள்?
முதல் வாரத்தில் ஒரு படத்தைத் திரையிடும் போது தயாரிப்பாளர்களுக்கு 50 விழுக்காடும், தியேட்டர் உரிமையாளர்களுக்கு 50 விழுக்காடும் பிரித்துக் கொள்ளப்படுகிறது. அதே போன்று இரண்டாவது வாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 55.5 விழுக்காடும், தயாரிப்பாளர்களுக்கு 45 விழுக்காடும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது வாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 60 விழுக்காடு, தயாரிப்பாளர்களுக்கு 40 விழுக்காடு பிரித்துக் கொள்ளப்படுகிறது. இது தான் வழக்கமாக நடைமுறை. இது திரையரங்கை பொறுத்து மாறுபடும். தயாரிப்பாளர்கள் அனைத்து திரையரங்குகளுக்கும் ஒரே மாதிரியான விழுக்காடு அடிப்படையில் படங்கள் கொடுத்தால் இது குறித்து அமர்ந்து பேசலாம். இதற்கு அவர்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் திரையரங்கில் படங்கள் வெளியிடுவது குறித்து யோசிக்கப்படும் என்று பாரதிராஜா கூறியுள்ளாரே?
ஓடிடியில் படங்களை வெளியிட எங்களிடம் கேட்கவா செய்கிறார்கள். படங்களை வெளியிடுவதும், வெளியிடாததும் அவர்கள் விருப்பம். திரையரங்கில் படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்கள் கல்யாண மண்டபமாக மாறிக்கொள்கிறோம். அவர்கள் வைத்துள்ள எந்த கோரிக்கைக்கும் பேச்சுவார்த்தைக்கே இடம் கிடையாது.
இயக்குநர் டி ராஜேந்தர் கியூப் கட்டணம் திரையரங்கு உரிமையாளர்கள் கட்டவேண்டும் என்று கூறியுள்ளாரே?
சினிமா தொடங்கிய காலத்திலிருந்து தயாரிப்பாளர்கள் தான் சினிமா திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் பிரிண்ட் வழங்குவார்கள். அப்போது ஒரு படத்தை ஒரு பிரிண்ட் போடுவதற்கு 65 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போது கியூப் மூலமாக செயல்படுவதால் 12 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பண செலவு மிச்சம் ஆக்கப்படுகிறது. இவர்கள் பழையபடி ப்ரொஜெக்டர் மூலம் படம் வெளியிடுவது என்றால் அவர்களது விருப்பம்.
தமிழ்நாட்டில் 400 பிரிண்டுகள் மட்டுமே போடப்படுகின்றன. ஆனால், மும்பையில் 2000 பிரிண்டுகள் வரை போடப்படுகின்றன. தெலுங்கில் ஆயிரம் பிரிண்டுகள் போடப்படுகின்றன. இதே போன்று கன்னடம், மலையாளம் என அனைத்து படங்களுக்கும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. படத்தின் பிரிண்ட் நீங்கள் தான் கொண்டுவந்து இத்தனை காலமாக கொடுத்து இருக்கிறீர்கள். செலவைக் குறைக்க வேண்டிய இடத்தில் குறைக்காமல் விட்டுவிடுகின்றனர்.