ஹைதராபாத்: அகிரா குரோசோவா, லூயி புனூயெல், இங்க்மார் பெர்க்மான், கிஸ்லோவ்ஸ்கி, ஜீன் லுக் காட்டர்டு ஆகிய உலகத் திரைப்பட ஜாம்பவான்கள் கேரளாவில் இருக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஆகப்பிரசித்தமாக இருப்பவர்கள். முன்பு ஒருகாலத்தில் மாநிலத்தின் தொலைதூர மூலைமுடுக்குகளில் எல்லாம் சிறிய திரைப்படச் சங்கங்கள் இணை உலகத் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சென்று பணியாற்றிக் கொண்டிருந்தன.
தொலைக்காட்சியும், வீடியோ நூலகங்களும் பிரசித்தம் ஆனபின்பு, இந்தச் சங்கங்கள் எல்லாம் காற்றில் கலந்து காணாமல் போயின. எனினும் சமீபத்தில் களமிறங்கிய சில ஓடிடித் தளங்கள் தற்காலத்தில் அதையே செய்கின்றன; அதாவது முன்னொருகாலத்தில் அந்தச் சின்ன சங்கங்கள் செய்ததை, ஓடிடியின் தயவால் இன்றைய திரைப்பட ரசிகர்களுக்கு சிறிய திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும் நல்வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஒடிடி அசூர வளர்ச்சி
கோவிட்-19 கொண்டுவந்த சமூகக் கட்டுப்பாடுகளின் விளைவால் இந்த வகையான ஓடிடிகளுக்கு ஒருகளம் அமைந்து விட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் ஓடிடிகளின் பிரபலமும் வியாபாரமும் இன்னும் மேலும் வளரும் என்று தொழில் நிபுணர்கள் சொல்கிறார்கள். பெரிய நிறுவனங்களின் திரைப்படங்கள் அரங்குகளில் வெளியிடப்படுவதற்கு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும்போது, சிறிய நிறுவனங்கள் தங்களின் படங்களை வெளியிடுவதற்கும் பெரிய திரையில் காட்சிப் படுத்துவதற்கும் இந்த ஓடிடி தளங்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் இரண்டு மலையாள உள்ளடக்க ஓடிடிகள், நீஸ்ட்ரீம், பிரைம் ரீல்ஸ் உதயமாகின. அவை பெரிய நட்சத்திரங்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றைவிட “தரமான உள்ளடக்கம்” என்ற கொள்கை ரீதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. “நாங்கள் மிக முக்கியமாக கருதுவது உள்ளடக்கத்தின் தரமும், படைப்பு உருவாக்க முறையும்தான். ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்னும் படத்தை அமேசானும், நெட்ஃபிளிக்ஸும் நிராகரித்தன. ஆனால் நாங்கள் அதன் தரத்தை உணர்ந்து கேரளாவில் அது பெரிதளவில் ஏற்கப்படும் என்பதை தெரிந்துகொண்டோம்,” என்றார் நீஸ்ட்ரீம் ஓடிடியின் கேரளாப் பிராந்திய தலைவரான சார்லஸ் ஜார்ஜ்.
தி கிரேட் இந்தியன் கிட்சன்
’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படத்தில் பிரதானமான பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தேசிய விருதுப் பெற்ற நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் மாநில விருதுப் பெற்ற நடிகை நிமிஷா சஜயன் ஆகியோர். படம் கேரளாவில் பெரும் புயலைக் கிளப்பியது. ஆணாதிக்கச் சமுக அமைப்பின் மீதும், கேரளா சமுதாயத்தில் பெண்கள் கீழ்த்தரமாக நடத்தப்படும் போக்கின் மீதும் நீண்ட நாளாகத் தேவைப்பட்டிருந்த ஆகப்பெரிய ஒரு விவாதத்திற்கான பொறியைக் கொளுத்திப் போட்டது அந்தத் திரைப்படம்.
சூடான விவாதப் பொருளாக திரைப்படம் பிரபலம் ஆனவுடன், நீஸ்ட்ரீமும் அந்தப் புகழின் நன்மைகளை அறுவடை செய்தது; சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்வையும் அனுபவித்தது. “பெரும்பாலான எங்களின் சந்தாதாரர்கள் கேரளாவுக்கு வெளியே இருப்பவர்கள்தான்; அவர்களுக்கு புதிய மலையாளப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு குறைவு. தரமான சரக்கை மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்கள்,” என்று மேலும் சொன்னார் சார்லஸ் ஜார்ஜ்.
ஒரு குயிலின் சுய வாக்குமூலங்கள்
கொச்சியைக் களமாகக் கொண்ட ஓடிடி தளமான பிரைம் ரீல்ஸும் நல்ல, சமூகத் தேவை கொண்ட திரைப்படங்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது. அவர்களின் தற்போதைய திரைப்படமான ‘ஒரு குயிலின் சுய வாக்குமூலங்கள்’ (தி கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ குக்கூ) ஒரு யதார்த்தவாதத் திரைப்படம். குழந்தை பாலியல் குற்றங்கள் செய்யும் நெருங்கிய உறவினர்களைப் பற்றி அது நிறையவே விவாதிக்கிறது. இயக்குநருக்கு அது முதல் படம்; ஆனாலும் ஓடிடி தளம் அவரது தரமான உள்ளடக்கத்தை மதித்தது; அதை ஏற்றுக்கொண்டு ஊக்குவிப்பதற்கு தயக்கம் காட்டவில்லை.
வணிக ரீதியாகத் தோற்றுப்போன நல்ல திரைப்படங்களையே எப்போதும் சார்ந்திருக்கும் கலாசாரத்தைக் கொண்டது கேரளா. அதிகாரப்பலம் கொண்ட விநியோகக் கட்டமைப்பு அந்த மாதிரியான படங்களின் வணிகவெற்றி சாத்தியத்தில் நம்பிக்கை இல்லாமல் அவற்றை அரங்குகளுக்கு அப்பால் வெளியே வைத்திருக்கிறது. இப்போதுகூட அந்த மாதிரியான படங்களின் ’அரங்கு ஆயுள்’ என்பது வெறும் ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ மட்டுந்தான். பிராந்திய ஓடிடி தளங்கள் இங்கேகூட உதவி செய்கின்றன. அந்தத் திரைப்படங்களுக்கு ஒரு நீண்ட பிரதானமான களம் அமைத்துக் கொடுக்கின்றன. ஆனால் நல்ல திரைப்படங்களும் கல்லாக்கட்டுகின்றன என்று தொழில் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
வணிக வெற்றி சாத்தியம்
’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ வெளியான பின்பு நீஸ்ட்ரீம் ஓடிடியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாகவே அதிகரித்திருக்கிறது. ப்ரைம் ரீல் ஓடிடியும் நல்ல திரைப்படங்களை தயார்நிலையில் வைத்திருக்கிறது. பெரிய நட்சத்திரப் பங்களிப்பு இல்லாத நல்ல தரமான படங்கள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன என்பது நிஜம். இதுதான் பிராந்திய ஓடிடிகளைத் தைரியமாக தங்களின் உள்ளடக்கத் தேர்வு உத்தியைப் பயன்படுத்த தூண்டுகிறது. ஆகப்பெரிய ஓடிடி தளங்கள் பெரிய நிறுவனப் பெயர்களில் வந்து பரபரப்பான உள்ளடக்கத்தை வெளியிடுகிற அதே வேளை, பிராந்திய ஓடிடிகள் தொழிலில் சின்ன அளவில் இருக்கும் கலைஞர்களையும், தொழில்நுட்பம் தெரிந்தவர்களையும் கூட்டிக் கொண்டு வித்தியாசமான பாதையில் பயணிக்கின்றன.
’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபி சொல்கிறார்: “நெட்ஃபிளிக்ஸும், அமேசானும் என் படத்தை நிராகரித்தவுடன் படத்தின் விதியைப் பற்றி நான் கவலைப்பட்டேன். ஆனால் நீஸ்ட்ரீம் எங்களை ஆதரித்தது.” ஆனாலும் அதற்காக நெட்ஃபிளிக்ஸையும், அமேசானையும் தான் குற்றம் சொல்லவில்லை. மேலும் அவர், “டெலிகிராம், மற்றும் மற்ற திருட்டுத் திரைப்படப் பகிர்வு ஊடகங்கள் இருக்கின்ற காலகட்டத்தில், அவர்களின் பயம் நியாயமானதே. என் திரைப்படத்தின் வணிகவெற்றி சாத்தியத்தைப் பற்றி அவர்கள் யோசித்திருக்கலாம்,” என்கிறார் அவர்.
ஜியோ பேபி
எனினும் நீஸ்ட்ரீம் உள்ளடக்கச் சரக்கைப் பற்றி மட்டுமே விவாதித்தது; அது மிகவும் தோழமை உணர்வோடு இருந்தது என்கிறார் ஜியோ பேபி. “இப்படி ஆகப்பிரமாண்டமான ஒரு விவாதப் பொருளாக இந்தப் படம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. என்றாலும் ஒரு தீவிரமான சொல்லாடலுக்கான பொறியை கொளுத்திப் போடக்கூடியது படத்தின் உள்ளடக்கச் சரக்கு என்று எனக்குத் தெரிந்திருந்தது.
இதை நான் நீஸ்ட்ரீம் நிர்வாகத்தினரிடமும் சொன்னேன்.” அரங்கில் வெளியிடப்படும் திரைப்படங்களைப் போல் அல்லாமல், ஓடிடி தளம் ஜியோவிற்கு இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைய உதவியிருக்கிறது. “அரங்குகளுக்கு வந்து பார்க்க முடியாத பெண்கள் கூட என் திரைப்படத்தை வீட்டிலே அமர்ந்து பார்த்து விவாதிக்கிறார்கள் என்பது எனக்குச் சந்தோசமாக இருக்கிறது,” என்று ஜியோ பேபி சொல்கிறார்.
வெப் சீரிஸ்
பிராந்திய ஓடிடிகள் நல்ல திரைப்படங்களின் மீது கவனம் குவிக்கின்றன; அவற்றை ஊக்குவிக்கின்றன. அது மட்டுமில்லாமல், அவை வெப் சீரிஸ் வடிவத்தில் தரமான உள்ளடக்கத்தையும் வளர்த்தெடுக்கின்றன. கேரளாவின் தொலைக்காட்சித் தொடர்கள் மோசமான தரத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஓடிடி தளங்கள் தரமான உள்ளடக்கத்தோடு கூடிய வெப் சீரிஸ் மூலம் இந்தப் புதிய கலைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சுகின்றன.
”தற்போது நான்கு வெப் சீரிஸ் தயாரிப்பு நிலையில் இருக்கின்றன. அவற்றில் கூட நாங்கள் உள்ளடக்கத் தரத்தைத்தான் பரிசோதிக்கிறோம். ஒரு வெப் சீரிஸை வெளியீட்டுக்கு ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, 18 எபிசோட்களைப் பார்த்துவிட்டு பரிசோதித்துக் கொள்கிறோம்,” என்கிறார் நீஸ்ட்ரீமின் சார்லஸ் ஜார்ஸ். கூடே போன்ற சில ஓடிடித் தளங்கள் ஒருபடி மேலே சென்று, குறும்படங்களுக்கும், இசை ஆல்பங்களுக்கும், வெப் சீரிஸ்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்து, திரைப்பட நேயர்கள் திரையில் பார்த்து அனுபவிக்கும் கேளிக்கை ஆனந்தத்திற்கு நிறைய வழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய ஒடிடி தளங்களுக்கு கட்டணம் செலுத்த தடைவிதித்த பாகிஸ்தான்!