தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் ராமானந்த் சாகர் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் ஒளிபரப்பான தொடர் 'ராமாயண்'. 78 எபிசோடுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட, இந்தத் தொடரில் ராமராக அருண்கோவிலும்; சீதையாக தீபிகா சிகாலியாவும் நடித்திருந்தனர்.
இவர்களுடன் லட்சுமணனாக சுனில் லஹ்ரியும்; ராவணனாக அரவிந்த் திரிவேதியும்; அனுமனாக தாரா சிங்கும் நடித்திருந்தனர். இந்தத் தொடரை அப்போது கிட்டத்தட்ட 82 விழுக்காடு பேர் பார்த்ததாகக் கூறப்பட்டது.
தேசிய ஊரடங்கு காலமான தற்போது, இந்தத் தொடர் தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பான 'ராமாயண்' பகுதியை 7.7 கோடி மக்கள் பார்த்துள்ளனர்.
இதன் மூலம் உலகில் அதிகம் மக்கள் பார்த்துள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை, 'ராமாயண்' எட்டியது. இதனை தூர்தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உலகில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இதிகாசத் தொடர், என்ற சாதனையை 2003ஆம் ஆண்டு வரை தக்க வைத்த 'ராமாயண்' தற்போது மறு ஒளிபரப்பிலும் தொடர்ந்து சாதனைப் படைத்துள்ளது.