'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சக போட்டியாளர் தர்ஷனுடன் இணைந்து அசுரன் படப் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின்.
தமிழ், தெலுங்கு, கன்னடா என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்த ஷெரின், பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார். இதையடுத்து அவரைத் தேடிப்பிடித்து 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கப்பட்டார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக திகழ்ந்த இவர், இறுதி வரை சென்று மூன்றாவது ரன்னர்-அப் என தேர்வு செய்யப்பட்டார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்போது சகபோட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுடன் நெருக்கமாக பழகி வந்தார் ஷெரின். இதையடுத்து இவர்கள் இருவரின் உறவு குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
பிக் பாஸ் சீசன் 3 தற்போது முடிந்துவிட்ட நிலையில், இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் - ஷெரின் ஆகியோர் தொடர்ந்து நட்பாக பழகி வருகின்றனர்.
தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அசுரன்' படத்தில் இடம்பெறும் 'கத்தரி பூவழகி' என்ற ரொமாண்டிக் குத்துப் பாடலுக்கு இவர்கள் இருவரும் நடனமாடும் சிறிய வீடியோ கிளிப்பிங்கை ஷெரின் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஷெரினை பாராட்டி வருகின்றனர். இளமை மாறாத ஷெரின், என்றும் 16 வயதில் ஷெரின் என உச்சி குளிரும் விதமாக கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.
தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஷெரின். கடைசியாக உதயநிதி நடிப்பில் 2015இல் வெளியான நண்பேன்டா படத்தில் இவர் நடித்திருந்தார்.