தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Bharathi Mani Passed away: 70 ஆண்டுகால பன்முக வித்தகர் பாரதி மணி காலமானார்!

70 ஆண்டுகால நாடகக் கலைஞர், நடிகர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பாரதி மணி நேற்று (நவம்பர் 16) உடல்நலக் குறைவால் காலமானார் (Bharathi Mani Passed away). அவருக்கு வயது 84. பாரதி மணி குறித்து எழுத்தாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய பதிவின் சுருக்கம் இதோ...

Bharathi Mani, பாரதி மணி, பாரதி மணி மறைந்தார்,  Bharathi Mani has passed away
Bharathi Mani

By

Published : Nov 17, 2021, 11:12 AM IST

சென்னை: "பாரதி மணி (Bharathi Mani), 1937 செப்டம்பர் 24ஆம் தேதி நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் சுப்பிரமணியம் - சிவகாமி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது நாடக அனுபவம் 1944இல் தொடங்கியது. தனது தந்தையாரால் ஏழாவது வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ மதுரை தேவி பால வினோத நாடக சபாவில் சேர்க்கப்பட்டார்.

பின்னர், 1955இல் டெல்லி சென்ற இவர், பூர்ணம் விஸ்வநாதன் இயக்கி நடித்த ஓரங்க நாடகங்களிலும், ஆல் இந்தியா ரேடியோவின் நாடகங்களிலும் பங்குபெற்றார். 1956இல் டெல்லியில் தட்சிண பாரத நாடக சபாவை தமிழ் நாடகத்துக்கான முதல் அமைப்பாக ராமநாதன், ராமதாஸ் ஆகியோருடன் தொடங்கினார்.

சிறுவயதில் தாய், தந்தையுடன் பாரதி மணி

டெல்லி வாழ்வு

முதல் நாடகமாக, பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’யில் வேலைக்கார சபாபதியாக நடித்தவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் பம்மல், கோமதி சுவாமிநாதன், கே.கே. ராமன், கே. பாலசந்தர், சோ. ராமசாமி, கே.எஸ். ஸ்ரீனிவாசன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சி.சு. செல்லப்பா, எஸ்.எம்.ஏ. ராம் போன்றோரின் பல நாடகங்களில் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் நடித்திருக்கிறார்.

டெல்லி ‘யதார்த்தா’ பென்னேஸ்வரன் இயக்கிய நாடகங்களிலும் இவர் நடித்ததுண்டு. இவரை இயக்கியவர்களில் தி. ஜானகிராமனும், கே. எஸ். ராஜேந்திரனும் அடக்கம். அறுபதுகளில் இப்ராகிம் அல்காஸி இயக்குநராக இருந்த டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் அவரது மாணவராகச் சேர்ந்தார்.

பாரதி மணி

பஷீராக பாட்டையா

மும்பை, கொல்கத்தா, சென்னை, சண்டிகர் போன்ற நகரங்களிலும் இவரது நாடகங்கள் மேடையேறின. 'நாடகங்களை எழுத தன்னை எழுதத் தூண்டியவர் பாரதி மணிதான்' என இந்திரா பார்த்தசாரதி இவரைப் பாராட்டியிருக்கிறார். லண்டன் ஸ்கூல் ஆப் டிராமாவில் குரல் வளத்துக்கான (Voice Culture) சான்றிதழ் பெற்றவர்.

2004ஆம் டெல்லி தேசிய நாடகப் பள்ளியும், ‘நாடக வெளி’யும் பாரதி மணியின் 60 கால மேடை அனுபவத்தைப் பாராட்டி, ஒரு மாத நாடகப்பட்டறை நடத்தி, விழாவின் முடிவில் மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆளேகர் எழுதிய ‘மஹா நிர்வாணம்’ நாடகத்தின் தமிழாக்கம் இவரது நடிப்பில் நடந்தேறியது. 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் வைக்கம் முகமது பஷீரின் ‘சப்தங்கள்’ நாடகத்தில் பஷீராக நடித்தது, பரவலான வரவேற்பைப் பெற்றது.

பாரதி மணி (Bharathi Mani Passed away)

1991ஆம் லண்டன் பிபிசி சானல்-4 தயாரித்து, அருந்ததி ராய் கதை வசனமெழுதிய 'தி எலெக்ட்ரிக் மூன்' (The Electric Moon) என்ற ஆங்கிலப் படத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்கு 1991இல் சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் பாரதி, ஊருக்கு நூறுபேர், நண்பா… நண்பா!, ஒருத்தி, றெக்கை, மொட்டுக்கா, ஆட்டோகிராப், அந்நியன் போன்ற விருதுப் படங்களில் நடித்துள்ளார்.

திரைப் பயணங்கள்

முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன்/கதாநாயகியின் தாத்தா பாத்திரங்களில் நடித்துள்ளார். பாபா, புதுப்பேட்டை திரைப்படங்களிலும் முதலமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். 2010இல் மறைந்த முன்னாள் அமைச்சர் பி. கக்கன் நூற்றாண்டு விழாவிற்கு எடுக்கப்பட்ட முழுநீள ஆவணப்படத்தில் கக்கனாக, பாரதி நடித்திருக்கிறார்.

நடிகை எமி ஜாக்சன் உடன் பாரதி மணி

2012இல் ‘சென்னை அரங்கம்’ என்ற நாடகக்குழுவை அம்ஜத் மணிமேகலை போன்ற நாடக ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்கினார். சென்னை அரங்கத்தின் முதல் நாடகமாக சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்!’ என்ற நாடகத்தை சென்னை மியூசியம் அரங்கில் மேடையேற்றினார். இந்நாடகம் திருவண்ணாமலையிலும் அரங்கேறியது.

ஆர்.எஸ். சிவாஜி, பாரதி மணி, ஜூனியர் பாலையா (இடமிருந்து வலமாக)

போய் வாருங்கள் பாட்டையா

தனது புத்தக்கமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், பிறகு இவர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பாக 'புள்ளிகள் கோடுகள் கோலங்கள்' என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்து பரவலான வரவேற்பைப் பெற்றது.

பாரதி மணி (Bharathi Mani Passed away)

பாரதி மணியின் எழுபதாண்டு மேடை அனுபவத்தை முன்னிட்டு ஒரு விழாவும் நடந்துள்ளது" என பாரதி மணியின் வாழ்வு குறித்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

பாரதி மணி

பாரதி மணி, கடைசியாக மாதவன் நடிப்பில் வெளிவந்த 'மாறா' திரைப்படத்தில் நடித்தார். தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் இனி நடிக்கhd போவதில்லை என பாரதி மணி முன்னரே அறிவித்திருந்தார்.

வாசகர்களாலும், சக எழுத்தாளர்களாலும் பாட்டையா என அன்புடன் அழைக்கப்படும் பாரதி மணி (84), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் (Bharathi Mani Passed away). அவருக்குத் திரைப் பிரபலங்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:பிர்சா முண்டா தொடங்கிய போர் இன்றும் தொடர்கிறது- கே.எஸ். ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details