இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், " ’ராட்சசி’ படத்திற்காக தனியார் தொலைக்காட்சி வழங்கிய விருதைப் பெற்றபின் பேசிய திரைக்கலைஞர் ஜோதிகா, ’படப்பிடிப்புக்காக தஞ்சாவூருக்குச் சென்ற போது பெரிய கோயிலைப் பார்த்தேன். மிக அழகாக இருந்தது. பின்னர், தஞ்சை அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அடிப்படை வசதியற்று, பராமரிப்பற்று இருந்தது. நாம் கோயில்களை பராமரிக்க அதிக செலவு செய்கிறோம். பெயின்ட் பண்ணுகிறோம், உண்டியல்களில் பணம் போடுகிறோம். அதே போல அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் கொடுங்கள்’ என்ற வேண்டுகோளை வைத்தார்.
ஜோதிகாவின் இக்கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.
இந்நிலையில், இந்து கோயிலை ஜோதிகா இழிவு படுத்திவிட்டதாகவும், ஜோதிகா இந்து கோயில்களுக்கு நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் பொய்யான தகவலை சிலர் முகநூலில் பரப்பி வருகின்றனர். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் பதிவிட்டு மிகவும் இழிவான அரசியலை நடத்தி வருகின்றனர். இதே கருத்தை ஆண் பேசியிருந்தால் ’ஆண்டி இந்தியன்’ என்றிருப்பார்கள். பெண்ணாக இருப்பதால் பாலியல் நிந்தனைச் சொற்களாலும், நடத்தை குறித்தும் இழிவாகப் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் ஜோதிகாவிற்கு அஞ்சலி செலுத்தி போஸ்டர் போட்டுள்ளனர். இவர்களின் இத்தகைய செயல் அநாகரீகமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, ஜோதிகாவை இழிவாக முகநூலில் பதிவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நடிகை ஜோதிகாவின் கேள்வியில் அர்த்தம் உள்ளது - கி.வீரமணி