'நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் திரைப்படம் 'வலிமை’. எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார். அதுமட்டுமின்றி வலிமை படத்தில் அதிரடி பைக் ரேஸ், கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
'வலிமை' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்துமுடிந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் அட்டகாசமான பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் மட்டும் கடந்த 30 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.
பொதுவெளி, நிலப்பரப்பில் படப்பிடிப்பை நடத்த விரும்பும் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ராஜஸ்தான் மாநில பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது வலிமை படத்திலும் நீண்ட சமதளப்பரப்பில் அதிரடி சண்டைக்காட்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இரண்டு மாதத்தில் படக்குழு ஸ்பெயின் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல ஹாலிவுட் படங்கள் படப்பிடிப்புகளை வெளிநாடுகளில் சென்று நடத்துவதை தவிர்த்துவருகின்றன. இந்நிலையில் வலிமை படக்குழுவினர் ஸ்பெயினில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது சாத்தியமாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.