தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்குமா பிக்பாஸ்-3? - start tommorrow

நாளை இரவு எட்டு மணிக்கு பிக்பாஸ் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தை 'பிக்பாஸ் -3' தீர்த்து வைக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக்பாஸ்

By

Published : Jun 22, 2019, 11:18 AM IST

பிக்பாஸ், பிக்பாஸ் -2 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ்-3 வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. வடமாநிலங்களில் ஹிட்டடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தென்னிந்தியாவிலும் 2017ஆம் ஆண்டு அறிமுகமானது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாடல் ஆசிரியர் சினேகன், ஜல்லிக்கட்டு ஜூலி, ஓவியா, ஆரவ், பிந்து மாதவி, காயத்ரி ரகுராம், நாடோடிகள் பரணி, நடிகர் சக்தி, சுஜா வருணி, ரைசா, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரே வீட்டில் 15 பிரபலங்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டும்.

பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குடும்பத்தை சீர்குலைக்கும் நிகழ்ச்சி என்றும் இதில் ஆபாச பேச்சு வார்த்தைகளும் விதிமுறை இல்லாமல் போய்விடும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். கமல்ஹாசன் மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் எதிர்ப்புகளைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இளைஞர்களின் ஆதரவை மட்டுமே பெற்றது. பின்னாளில், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சேட்டைகள், சண்டைகள், ஆரவ் மீதான ஓவியாவின் ஒருதலைக் காதல், மருத்துவ முத்தம் என மக்கள் மத்தியில் புகழ்பெறத் தொடங்கியது.

ஆரவ்-ஓவியா

சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், ஜூலியின் நடிப்பு ஆகியவற்றைக் கண்டு மக்கள் எரிச்சலுற்றனர். ஓவியா, ஆரவ்வை காதலித்து தோல்வியடைந்த துக்கம் தாங்காமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கமல்ஹாசன் 'அது என்ன இதுவரை நான் கேள்விப்படாத மருத்துவ முத்தம் நீங்க விளக்குங்க ஆரவ்' என பல கேட்விகளால் ஆரவை மிரள வைத்தார். மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதனால் சில சென்சார் தேவைப்படுகிறது என பெப்பரை தூவி விடுவதுபோல் பேச்சால் வசீகரித்தார் கமல். இதனைத்தொடர்ந்து ஓவியா ஆர்மி மிகவும் பிரபலமானது. ஓவியா ஆதரவாளர்கள் ஜூலியை கடுமையாக விமர்சித்தனர். ஜூலி செய்யும் தவறுகளை மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்து ட்ரெண்டாக்கினர்.

பிக்பாஸ் ஜூலி

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களை பரவசப்படுத்தியது. இரவு 8 மணி ஆனால்போதும், குடும்பப் பெண்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி பிக்பாஸ்தான். மேலும், கமல்ஹாசன் பேசிய அரசியல் வசனங்கள் பிக்பாஸ் முதல் சீசன் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது. மக்களைக் கவரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசிய அரசியல் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. கண்களை உயர்த்தி, மீசையை முறுக்கி இலைமறைக் காயாக ஆளும் கட்சியை கடுமையாக சாடினார். நான் கட்சி தொடங்கினால் வாக்களிப்பீர்களா என்று கேட்டதோடு இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் புதிய கட்சியை தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுததினார்.

கமல்ஹாசன்

இதனால், வாரத்தில் ஒருநாள் போட்டியாளர்களை கண்டிப்பதுபோல் அரசியல்வாதிகளுக்கு பாடம் எடுக்க வரும் கமல்ஹாசனைக் காண ஆர்வத்துடன் மக்கள் காத்திருந்தனர். முதல் சீசனில் மறக்க முடியாத ஜோடி என்றால் அது ரைசா, ஹரீஷ் கல்யாண்தான். பிக்பாஸ் மூலம் பிரபலமாகி இருவரும் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தனர். முதல் சீசனின் எண்டு கேம் சாதாரணமாக
இருக்கவில்லை. பலரது வாழ்க்கையில் ஒளிவிளக்காய் இருந்துள்ளது. நடிகையாக வெற்றிபெற முடியாத ஓவியாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தனி அடையாளத்தை தந்தது.

ஆரவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது. மறந்துபோன சினேகனை தமிழ் சினிமா அடையாளம் கண்டது. பெயர் முகம் தெரியாத ஜூலிக்கு கெட்டவள் என்ற பெயர் கிடைத்தாலும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. பிக்பாஸ் உண்மையில் நீங்க பெரிய பாஸ்தான் என உச்சுக்கொட்ட வைத்தது.

முதல் சீசன் முடிந்த நேரம் அது. அப்போது ஓவியா ஆர்மி என்ன பன்றாங்க, கமல் கட்சி தொடங்கி எங்கே போறாரு, 'ஏன்மா ஜூலி பிக்பாஸ் வீட்டில்தான் அப்படி பேசுற, வெளிய வந்தும் நீ திருந்தலையா?' என நெட்டிசன்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், பிக்பாஸ் கொடுத்த பிரமாண்ட வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்த சீசன் தொடங்கியது. பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இடம்பிடித்த சர்ச்சைகள் ஏராளம், கவர்ச்சிகள் நிறைந்த விமர்சனங்களும் இடம்பெற்றாலும் முதல் சீசன்போல் மக்கள் மனதைக் கவரவில்லை. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும் குறைந்துபோனது.

பிக்பாஸ் -2வது சீசன்

இரண்டாவது சீசனில் மகத், யாஷிகா, ஐஸ்வர்யா செய்த லூட்டிகளை பற்றிப் பேச பட்டியலே நீளும். இது குடும்பம் பார்க்கும் நிகழ்ச்சியா என்று மக்கள் முகம் சுளித்தனர். கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களை நாடினர். யாஷிகாவும், மகத்தும் செய்த காதல் நாடகம் மக்களின் வெறுப்பை தேடித் தந்தது. ஏமாற்றங்களும், சோகங்களும் நிறைந்த முதல் சீசன் போல் அல்லாமல் இரண்டாவது சீசன் மக்களுக்கு அலுப்பை தந்ததே தவிற முழுமையான மன நிறைவைத் தரவில்லை. தமிழ் பேசத் தெரியாத நடிகைகள், மும்தாஜின் உண்மை முகத்தைக் கண்டு மக்கள் கோபமடைந்தனர். அரைகுறை ஆடை என கவர்ச்சிகள் மட்டுமே அதிகம் இடம்பெற்றன. கமல்ஹாசன் கட்சித் தொடங்கி சேவை செய்வார் என்று எதிர்பார்த்த மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். பிக்பாஸ் -2 இரண்டாம் கட்ட நிலையை அடைந்தது.

மகத், யாஷிகா ஆனந்த்

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு தொடங்க இருப்பதால் அதே எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில் ரசிகர்களின் கோரிக்கை என்னவென்றால் நல்ல தமி்ழ் பேசத் தெரிந்த போட்டியாளர்களைக் கொண்டு வருவது நல்லது. முக்கியமாக பொன்னம்பலம் போன்ற வில்லன் நடிகர்கள் வேண்டாம் என கூறிவருகின்றனர்.

பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கவுள்ள இந்த மூன்றாவது சீசனில் ஜாங்கிரி மதுமிதா, நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

கமல்ஹாசன்

'சென்னை மக்கள் தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர்; இந்நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீசன் தேவையா கமல்?' என்று கேள்விகளும் எழுந்து வருகின்றன. 'மக்களின் பிரச்னையைவிட பிக்பாஸ் பிரச்னைதான் ரொம்ப முக்கியமா? பக்கம் பக்கமா பேசாதீங்க கமல், நாங்கள் ஏமாளிகள் அல்ல' என்று நெட்டிசன்கள் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். தண்ணீருக்காக காத்திருக்கும் மக்களின் தாகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி தீர்த்து வைக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details