நடிகர் விஷால் அடுத்ததாக புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் புதியப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் பெயரிடப்படாத, இந்தப் படத்திற்கு தற்காலிகமாக '#விஷால் 31' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
புதுமுக இயக்குநருடன் கைகோர்த்த விஷால்... பக்கபலமான யுவன் சங்கர் ராஜா! - விஷால் 31
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் '#விஷால் 31' புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
து.பா.சரவணன் 'குள்ளநரிக்கூட்டம்' சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த 'தேன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அவர் இயக்கிய 'எது தேவையோ, அதுவே தர்மம்' குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. இக்குறும்படத்தினால் ஈர்க்கப்பட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு தந்துள்ளார். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, இப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கவுள்ள மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுவருகிறது. படத்தின் முன் தயாரிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.