விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' படத்தை இயக்கி முடித்த சீனு ராமசாமி, அடுத்ததாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து 'இடி முழக்கம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
த்ரில்லர் பாணியில் இடி முழக்கம்
இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரித்துள்ளார். வைரமுத்து பாடல் எழுத ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் ஒரு பாடலை மலையாள திரையுலகின் இயக்குநர், நடிகர், பாடகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் தன்மையுடன் வலம்வரும் வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் சார்பில் முகேன் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சீனு ராமசாமியின் படங்களில் இருந்து மாறுபட்ட இடி முழக்கம்
அதே நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் அடுத்த பெருமை மிகு படைப்பான “இடிமுழக்கம்” திரைப்படம் அழகாக உருவாகி வருவது மகிழ்ச்சி. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இயக்குநர் சீனு ராமசாமி அவரின் இயல்பான படங்களிலிருந்து மாறுபட்டு, முதன்முறையாக கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படம் ஆரம்ப நொடியிலிருந்து இறுதிவரை, எதிர்பாரா திருப்பங்களுடன், ஒரு பரபரப்பான திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் படைப்பாக இருக்கும்.
மலையாளத் திரையுலகில் பெரும் புகழை குவித்திருக்கும், பன்முக திறமை கொண்ட வினித் சீனிவாசன் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்’ என்றார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாவது, இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையில், பாடலின் ட்யூனை கேட்ட பிறகு, வினித் சீனிவாசன் குரல் இப்பாடலுக்கு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. அவரிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டார்.
வினித் சீனிவாசன் மீது மரியாதை
அவரது அபாரமான திரைப்பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவரின் மீதும், அவரின் படைப்புகள் மீதும் மிகப்பெரும் மரியாதை கொண்டுள்ளேன்.
அவரைச் சந்தித்தபோது எனது படைப்புகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அவை தனக்கு மிகவும் பிடிக்குமென்றும் கூறி என்னை ஆச்சர்யப்படுத்தினார்.
இப்பாடலை உடனடியாக ஒப்புக்கொண்டு அருமையான முறையில் பாடித்தந்தார். அவரது குரலில் இப்பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக இருக்கும் என்றார்.