தன்னை இயக்குநராக மாற பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஊக்குவிப்பதாக நடிகர் வின் டீசல் கூறியுள்ளார்.
'ஈடி (ET)', 'ஜுராஸிக் பார்க்', 'கேட்ச் மீ இஃப் யூ கேன்' உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவரது படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்துள்ளன. இவர் இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உள்ளார்.
அதேபோல் உலகளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தின் சீரியஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் வின் டீசல். இவர் 1997ஆம் ஆண்டு 'ஸ்ட்ரேஸ்(Strays)' என்னும் படத்தை தனது சொந்த தயாரிப்பில் எழுதி இயக்கி நடித்திருந்தார். சிறந்த வாழ்க்கை முறையைத் தேடும் போதைப்பொருள் வியாபாரியாக நடித்த அவர் அப்படத்தின் மூலம் ஹாலிவுட் பிரபலங்களை அதிகம் திரும்பி பார்க்க வைத்தார்.
பின் 1998ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய சேவிங் ப்ரைவேட் ரியான் (Saving Private Ryan) என்னும் படத்தில் வின் டீசலை முக்கியக் கதபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதனால் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் வின் டீசலுக்கும் இடையில் நல்ல நட்பு உருவானது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்போதும் தன்னை அதிக படங்களை இயக்க ஊக்குவிப்பதாக பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ”நான் சமீபத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் சேவிங் ப்ரைவேட் ரியான் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். நீங்கள் நடிகராக இருப்பதை விட இயக்குநராக அதிக படங்கள் இயக்குங்கள். நீங்கள் இதுநாள் வரை படம் இயக்காமல் இருப்பது சினிமாவுக்கு செய்யும் குற்றமாகும். நீங்கள் விரைவில் இயக்குநர் நாற்காலியில் அமர வேண்டும்" என்றார்.
இதையும் வாசிங்க: 'என் பாட்டிக்கு தெரியும்... ஆனால் என் அப்பாவுக்கு தெரியாது' - பாப் பாடகி மிலே சிரஸ் வருத்தம்