'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற சொல்லாடலுக்கிணங்க தனது வாழ்க்கையில் இடைஞ்சல்களாய் இருந்த தடைக் கற்களை முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக மாற்றி உச்சம் தொட்டவர் நடிகர் விஜய்சேதுபதி. 'மக்கள் செல்வன்' என அன்புடன் அழைக்கப்படும் விஜய்சேதுபதி சீனு ராமசாமியின் 'தென்மேற்குப் பருவக் காற்று' படம் மூலம் கதாநாயகனாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
'புதுப்பேட்டை', 'லீ', 'நான் மகான் அல்ல' உள்ளிட்ட பல படங்களிலும் பின்னணி நடிகராக இருந்து கடின உழைப்பின் பலனாக இன்று தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக உருவெடுத்திருக்கிறார்.
1978ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் ராஜபாளையத்தில் பிறந்த விஜய்சேதுபதி இன்று தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரு உன்னத கலைஞனாக உச்சம் தொட்டுள்ளார். திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகர் ஆமிர்கான் உள்பட பலருடனும் நடித்துள்ள விஜய்சேதுபதி தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து தனது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பதித்துள்ளார்.
சிறந்த கதைக்களங்கள் கொண்ட படங்களைத் தேர்வுசெய்து நடித்துவரும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்', 'சேதுபதி', 'இறைவி', 'தர்மதுரை', 'விக்ரம் வேதா', 'செக்கச் சிவந்த வானம்', '96' உள்ளிட்ட பல படங்கள் அவரது நடிப்புக்குத் தீனி போட்ட படங்களாகவும், அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கூட்டிச் சென்ற படங்களாகவும் அமைந்தன.