தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால், உயிரிழந்தார். அவருக்கு வயது 82. 1965ஆம் ஆண்டு வெளியான ’வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
இவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பர். நடிகர் ஸ்ரீ காந்த் திரையுலகில் நுழைவதற்கு முன், அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிவந்தார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற பலரின் திரைப்படங்களில், ஸ்ரீ காந்த் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பின்னர் 80-களின் தொடக்கத்தில் திரையுலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரின் திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த ’பைரவி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தது இவரே.
அவரது மறைவுக்குப் பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இவரின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்க முடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி, அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார்.
எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மூத்த தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு!