இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நள்ளிரவு முதல் அமல்படுத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் வெளியே வரமால் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்பதை திரை பிரபலங்கள் பலர் தங்களது சமூகவலைதள பக்கங்கள் வாயிலாக கூறிவருகின்றனர்.
இதையடுத்து, வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பல பேர் தங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை தனியே விட்டு ஊருக்குச் சென்றுள்ளனர். செல்ல பிராணிகளை தனியே விட்டுச் செல்ல வேண்டாம். செல்ல பிராணிகளும் ஒரு உயிரினம் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
கரோனா வைரஸ் பற்றி அந்த விலங்களுக்கு எதுவும் தெரியாது. அதுமட்டுமன்றி தெரு நாய்களுக்கும் தெருவில் உள்ள விலங்குகளுக்கும் முடிந்தால் சாப்பாடு போடுங்கள். உடனே ஒரு குரூப் ஓடி வந்து எங்களுக்கே சாப்பாடு இல்லை. நாங்கள் எப்படி நாய்க்கு சாப்பாடு போட முடியும் என்று கேட்பார்கள். நான் எல்லோரையும் சாப்பாடு போடச் சொல்லவில்லை. முடிந்தவர்கள் மட்டும் தயவு செய்து நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரலட்சுமி நேற்று வெளியிட்டிருந்த வீடியோவில், கரோனா குறித்த விழிப்புணர்வு நாம் அனைவருக்கும் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. ‘Contagion’ (தொற்று) என்ற படம் உள்ளது. அந்த படத்தை தயவு செய்து அனைவரும் பாருங்கள் அதில் வைரஸின் கொடூரம் குறித்தும் அது பரவும் தன்மை குறித்தும் காட்டப்பட்டுள்ளது. தயவு செய்து சூழ்நிலையை புரிந்துக்கொள்ளுங்கள் என்று அதில் கூறியிருந்தார்.