சென்னை:அஜித்குமார் நடிப்பில் அவரது 60ஆவது படமாக உருவாகி வெளியீட்டுக்குத் தயார் நிலையிலுள்ளது வலிமை. இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.
போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ’குக் விட் கோமாளி’ புகழ், யோகி பாபு உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.
இந்நிலையில், இத்திரைப்படம் வெகு நாள்களுக்கு முன்னரே திரையரங்குகளில் வெளியாக வேண்டியது. ஆனால், கரோனா, ஊராடங்கு, பல்வேறு தவிர்க்க முடியாத தடங்கல்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இறுதியாகப் பொங்கல் வெளியீடு என அறிவித்து, மீண்டும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதிமுதல் திரையரங்குகளில் வெளிவரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தச் செய்தியைக் கண்ட அஜித் ரசிகர்கள் வளைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
அன்றைய தினம்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளும்கூட என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
இதையும் படிங்க:'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு