கேரள மாநிலம், கோழிக்கோடு, கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது, தடுமாறி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே நாளில் (ஆக. 7) கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கினார்கள்.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தபோதிலும் இந்த நிலச்சரிவில் கேரள அரசு துரிதமாக செயல்படவில்லை என எதிர்க்கட்சியினர் உள்பட பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள கவிஞர் வைரமுத்து, 'விமான விபத்து மீட்சியைத் திறம்பட நிகழ்த்திய கேரள ஆட்சியைப் பாராட்டுகிறோம். அதேபோல் மண்ணில் புதைந்த மக்களுக்கும் விரைந்த மீட்பும் தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம். வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்; மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா என்ன?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க...கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 50ஆக உயர்வு!