தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரிகள்,ஓட்டல்கள், அலுவலகங்கள் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது திருமண மண்டபங்களும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றத் தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றுவதற்குத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக, எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட, குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?” என குறிப்பிட்டுள்ளார். இம்மருத்துவமனை அவரது மனைவி பெயரில் சென்னை, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது.