தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'உறியடி 2' ஏன்? இயக்குநர் அதிரடி - உறியடி 2

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தரமான சூழ்நிலையில் வாழ்வது அடிப்படை உரிமை. இதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை என உணர்த்தும் விதமாக 'உறியடி 2' படம் இருக்கும் என்று அப்படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேட்டியளித்துள்ளார்.

'உறியடி 2' ஏன்? இயக்குநர் அதிரடி

By

Published : Apr 5, 2019, 11:47 PM IST

கடந்த 2016-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'உறியடி' படத்தின் இரண்டாம் பாகமாக 'உறியடி 2' தயாராகி இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்தின் ரிலீஸுக்கு முன்னரே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் தொடர்பான நேர்மறையான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், படத்தின் நாயகனும், இயக்குநருமான விஜய் குமார் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவரது பதில்கள் பின்வருமாறு:

தியேட்டர் விசிட் சென்றிருப்பீர்கள். மக்களுடைய மனநிலை எப்படி இருந்தது?

என்ன விஷயம் நாம் பேச முற்படுகிறோமோ அது பெரிய அளவில் மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கையை இன்று எனக்கு படம் குறித்து வரும் நேர்மறையான கருத்துகள் கொடுத்திருக்கிறது. தியேட்டர் விசிட்டின்போது படத்தை பார்த்த மக்கள் முகத்திலும், படத்தில் கூறப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டது. இன்னும், இது பெருவாரியான மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கதை உருவாக என்ன காரணம். எதை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தக் கதையை எழுதினீர்கள்?

தொழிற்சாலைகள் கண்டிப்பாக தேவை. ஆனால், அந்த தொழிற்சாலைகள் சரியாக பராமரிக்காமலோ, அந்த தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு பொருட்களை முறையாகச் சுத்திகரிக்காமல் வெளியிட்டாலோ, சாமானிய மக்களை மிகவும் பாதிக்கிறது.

யாரோ ஒருவர் லாபம் பார்க்க நடத்தப்படும் தொழிற்சாலையால், என்னை சுற்றி வாழ்கின்ற சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்போது உலக அளவில் புள்ளி விபரங்களை எடுத்துப் பார்த்தோம் என்றால், சல்பர் டை ஆக்சைடு வெளியிடுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலக அளவில் மிக மோசமான மாசடைந்த முதல் 20 நகரங்களில், முதல் 14 இடங்களில் இந்திய நகரங்கள் உள்ளது உள்ளது. இதனால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது. இதையெல்லாம் படிக்கும்போது அந்த தொழிற்சாலை குறித்து ஒரு ஆராய்ச்சியில் இறங்கினேன். யாரோ ஒரு முதலாளி லாபம் பார்ப்பதற்கு நாம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இவையெல்லாம் சேர்ந்துதான் 'உறியடி 2'.

இந்த படத்தில் கதைக்கு இணையான இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதியாரின் பாடல்களை கூறலாம். அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்று எப்படி தோன்றியது?

'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ'. இந்த வரிகளுக்காகவே இந்தப் படத்தில் நாங்கள் இப்பாடலை வைத்தோம். பிரச்னையை எதிர் கொள்வதற்கு சிறியவர்கள் பெரியவர்கள் என்பது பாகுபாடு இல்லை. சிறிய தீக்குச்சிதான் காடுகளை எரியும் நிலையிலான தீ ஜுவாலைகள் ஆக மாற்றுகிறது. அந்தக் கோபம், அந்தச் சிந்தனை தேவை.

பாரதியாரின் கவிதைகள் மேல் அதிக ஈடுபாடு உண்டு. இந்தப் படத்தில் ஒரு சாதாரண மனிதன் மிகப்பெரிய அரசியல்வாதி எதிர்த்துப் போராடும் சூழ்நிலைக்கு, மிகவும் பவர்ஃபுல்லான இந்த வரிகள் தேவைப்பட்டதால் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது.

'உறியடி 2' மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன?

மிக முக்கியமான கருத்தாக, தொழிற்சாலைகள் தரமாகதான் பராமரிக்கிறார்கள் என்று மிகச் சரியாக ஆய்வு செய்து தொழிற்சாலை சுற்றி வாழும் மக்களுக்கு இதை தெரியப்படுத்த வேண்டும். முறையான பாதுகாப்பை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். தரமான சூழ்நிலையில் வாழ அடிப்படை உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. அதை உறுதிப்படுத்த வேண்டும். அதை தான் இந்த படம் கூறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details