தமிழ் சினிமாவில் மிக மிக அதிகமாக எடுக்கப்பட்ட கதைக்களங்கள், காதல் தொடர்பானவை தான். இக்கதைக்களம் ஒவ்வொரு காலகட்டங்களிலும் பரிணாமம் அடைந்துகொண்டே இருக்கும். அதனின் ஒவ்வொரு பரிணாமத்திற்கும் கருவியாக ஒரு படைப்பாளி தமிழ் திரையுலகில் அறிமுகமாவார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் வருகையையும் நாம் அப்படியே காணலாம். தமிழ் சினிமாவின் காதல் கலைக்களத்தை முதிர்ச்சியாக, முற்போக்காக அணுகியதில் கௌதமிற்கு மிகுந்த பங்கு உண்டு.
காதல் உறவை முதிர்ச்சியாக காட்சிப்படுத்தியது மட்டுமின்றி, மெக்கானிக்கல் இஞ்சினியரிங், புல்லட் பைக், காப்பு, காபி ஷாப் என்று கவுதம் மேனன் மேல் கண்ட விஷயங்களைக் கொண்டு ஒரு புதிய டிரெண்ட் செட்டராக, சொல்லப்போனால் அவைகளுக்கு பிராண்ட் அம்பாசடராகக் (Brand ambassador) கூட இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது..!
கௌதம் மேனனின் காதலிகள்
கௌதம் பங்குபெறும் முக்கால்வாசி பேட்டிகளில் அவரிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி, 'உங்கள் படத்தில் மட்டும் எப்படி கதாநாயகிகள் இவ்வளவு அழகாகத் தெரிகிறார்கள்..?' என்பதுதான். இந்தக் கேள்விக்கு தன் நெற்றியின் மேல் விரல்களை வைத்துக் கொண்டு தனக்கான பாணியில் நுணிநாக்கில் ஆங்கிலம் பேசி பதிலளிப்பார் கௌதம் மேனன். இந்தக் காட்சியை நாம் பல பேட்டிகளில் கண்டிருப்போம். அவர் படத்தில் நடிகைகள் அப்படி தெரிவதற்கு உண்மையான காரணம், கௌதம் மேனனின் பெண்கள் குறித்த பார்வை என்று சொல்லலாம்.
அவர்களை நேர்த்தியாக, முதிர்ச்சியான சிந்தனை கொண்டவர்களாக காட்ட வேண்டும் என்று தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் முயற்சி செய்கிறார். அவர் தன் நாயகிகளைக் கவர்ச்சியாகக் காட்ட நினைக்கவில்லை, மாறாக அவர்களை உண்மையாக காட்ட முயலும்போது, அது மிக அழகியலாக ஆகிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
உதாரணமாக, அவரின் இரண்டாவது திரைப்படமான ’காக்க காக்க’-வில் வரும் ’மாயா’ எனும் கதாபாத்திரம் தன் காதலை சொல்லும் காட்சியை எடுத்துக்கொள்வோம். ஒரு கதாநாயகி தன் காதலை அப்படி வெளிப்படுத்தும் ஒரு காட்சியை நாம் கண்டிருக்கவே முடியாது. ’I want to make love to you' என்று மாயா, அன்புச்செல்வனைப் பார்த்து கேட்கும் போது, 'ச்ச..!,இப்படி ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியைத் திரையில் ஒரு முறை கூட பார்த்ததில்லையே' என்றே தோன்றியது. இப்படிப்பட்டப் பெண் கதாபாத்திர வடிவமைப்புகள் கௌதம் மேனனின் திரைப்படத்தில் தான் ஆரம்பித்தது.
மற்றொரு காதல் சொல்லும் காட்சியாக ’வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் பிரியா, சூர்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியையும் சொல்லலாம். அதற்கு சூர்யா 'ஒரு பொண்ணும் பையனும் கடைசி வரை Friendsa இருக்க முடிறது இல்லைல..?' என்று பேசும் பதில் வசனமும் இதுவரை எந்த ஒரு ஆணும் திரையில் சொல்லி நாம் பார்த்திராத பதிலாகத்தான் இருக்கும்.