சென்னை: தமிழ்த்திரைப்படங்களில் பல வெற்றிப்படங்களைத் தந்தவர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று நிற்கின்றன. குறிப்பாக, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, தசாவதாரம் போன்ற எத்தனையோ பல ஹிட்டான படங்களை அவர், தந்துள்ளார். அவற்றுள் இவரே கூட நடித்து, தான் ஒரு இயக்குநர் மட்டுமில்லை, நல்ல நடிகரும் கூட என்று அசத்தியிருப்பார்.
இவர் தற்போது, வித்தியாசமான திரைக்தை கொண்ட கூகுள் குட்டப்பா என்னும் திரைப்படத்தில் பிக்பாஸில் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில், காமெடியனாக யோகி பாபு நடித்துள்ள நிலையில் ரோபோ ஒன்றுக்கும் படத்தில் முக்கியரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், அந்த ரோபோவைச் சுற்றியே படத்தின் கதை நகர்கிறது.
பாடல் வெளியீடு
ஜிப்ரான், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் போஸ்டர், டீசர் வெளிவந்து வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடிய பொம்ம பொம்ம லிரிக் பாடல் வெளியாகி, ஒரே நாளில் மில்லியன் பார்வையாளார்களைக் கடந்துள்ளது. இதனால், படக்குழுவினர், பாடலைத் தொடர்ந்து, படமும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ட்ரெய்லர் வெளியீடு
இன்று மார்ச் 14ஆம் தேதி, சென்னையில் 'கூகுள் குட்டப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், பேரரசு மற்றும் இயக்குநர்கள் தங்கர் பச்சான், சபரி மற்றும் சரவணன், ரமேஷ் கண்ணா, சுரேஷ் மேனன் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரோபோ! பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியா ஆகியோரும் இதில் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்வில் பூவையார், பாண்டி, விஜய் சந்தர், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் , 'இது ஒரு குடும்ப விழா. எனது தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணமானவர் கமல்ஹாசன் . 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை தயாரித்துள்ளேன். வைரமுத்துவின் மாடர்ன் வெர்ஷன் தான் மதன் கார்க்கி. விரைவில் அவர் படம் இயக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று பேசினார்.
ட்ரெய்லரை வெளியிட்ட ரோபோ
படத்தில் நடித்த நடிகர் தர்ஷன், 'எனது முதல் படத்திலேயே நான் எதிர்பார்த்தவை நடந்துள்ளன. இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நிறைய கற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
விழாவில் பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், 'தர்ஷனும் லாஸ்லியாவும் நம்முடைய உறவினர் பிள்ளைகள். அவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்' என்றார். விழாவில் ரோபோ, படத்தின் ட்ரெய்லரை வெளியிட ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.