தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்களுக்கு சிக்கல்கள் இல்லை' - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

சென்னை: அடுத்தாண்டு மார்ச் மாதம் இறுதி வரை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Theatres
Theatres

By

Published : Nov 18, 2020, 7:51 PM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 விழுக்காடு பார்வையாளர்களை மட்டும் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடித்து திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.

ஆனால் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது எனத் தெரிவித்தனர். இதனையடுத்து தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் நவம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு விபிஎஃப் கட்டணங்கள் தேவையில்லை என க்யூப், யூஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தற்காலிகமாக இந்த மாதம் இறுதிவரை புதுப் படங்கள் வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இதனையடுத்து தற்போது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப் நிறுவனம், தமிழ்நாடு திரையரங்கு - மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் விபிஎஃப் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் க்யூப் நிறுவனம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே விபிஎஃப் கட்டணம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவந்தது.

அந்த பேச்சுவார்த்தை இன்று இனிதே முடிந்தது. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் க்யூப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திரையரங்கு - மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கை

அதன்படி க்யூப் நிறுவனம் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த விபிஎஃப் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் துறை இந்த கரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும். புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மூன்று சாராரும் இந்த சுமுகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் மூன்று சாராரும் இணைந்து விபிஎஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம் இந்த பிரச்சினை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும் நடுத்தர, சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும்.

அதன் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத் துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு - மல்டிபிளக்ஸ் சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details