சென்னை: அறிவியல் வளர்ச்சிகளினால் முன்னேறிக் கொண்டே வருகிற நவீன காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதற்கிடையே நமது மக்கள் குறிப்பாக, கிராமப்புறங்களிலுள்ள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூகம் மற்றும் அதனைச் சார்ந்த வளர்ச்சிகள் குறித்த சிந்தனைகள் அதிகரித்துள்ளனவா என்ற கேள்விகள் இருந்து கொண்டேதான் உள்ளன. இதனால், தான் அரசும் கிராமங்களையும் அங்குள்ளவர்களையும் முன்னேற்றப்பாதைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பல திட்டங்களினை அறிமுகம் செய்து வருகிறது.
இன்னொரு புறம், அவர்களும் அவ்வப்போது தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், இன்றளவும் அங்குள்ள மக்கள் எப்படி தங்களின் சக மனிதர்களை நடத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும்.
இந்நிலையில் குமரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் எழுதி இசை அமைத்துப் பாடியுள்ள தனியிசை பாடல் "பறை". இந்தப் பாடலின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 4ஆம் தேதியான இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் குமரன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடிகர் ஹரீஷ் கல்யாண், இயக்குநர் ஞானவேல், பாடகர் ஶ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பாடலானது, தமிழ்நாட்டில் வேலூரில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இறந்துபோன பட்டியல் இனத்தவரின் சடலத்தை ஊருக்குள் கொண்டு செல்ல அனுமதிக்காத நிகழ்வைத்தான் பாடலாக உருவாக்கியுள்ளனர்.