ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அண்ணன் - தம்பி கூட்டணியான மோகன் ராஜா - ஜெயம் ரவி, தெலுங்கில் சூப்பர்ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிற்க ஆரம்பித்தனர். இப்படி ரீமேக் ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்த மோகன் ராஜாவை, 2015 ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பிறகு 'தனி ஒருவன்' ராஜா என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
மோகன் ராஜாவுக்கு தனியொரு அடையாளத்தை ’தனி ஒருவன்’ திரைப்படம் மிக அழுத்தமாக கொடுத்தது. ஒரு நல்ல காவல் அதிகாரிக்கும், பக்கா ஜீனியஸ் வில்லனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை ரசிகர்களுக்கு சலிக்காத வகையில் அழகான திரைக்கதையுடன் நகர்த்தியிருப்பார் மோகன் ராஜா.
தனக்கான எதிரியை நிர்ணயித்து அவனை அழிக்கும் நோக்குடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியாக மித்ரன் (ஜெயம் ரவி). ஐபிஎஸ் படிக்கும் காலத்திலேயே மித்ரன் தனது நண்பர்களுடன் இரவில் ரோந்துக்கு சென்று நடக்கும் குற்றங்களை தடுக்கின்றான்.
இது ஒரு பக்கம், மறு பக்கம் ஐபிஎஸ், ஐஏஎஸ் படிப்பை பாதியில் விட்ட மாணவியான மகிமா (நயன்தாரா), மித்ரனை காதலித்து வருகிறார். பின் மகிமா கைரேகை நிபுணராகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் கதாநாயகர்களை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சியை பார்த்தாலும், இதில் மகிமாவின் கதாபாத்திரம் கண்ணியம்.
'சந்தோஷ் சுப்பரமணியன்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' போன்ற சினிமாக்களில் துள்ளலும் இளமையும் நிறைந்த ஜெயம் ரவி, இப்படத்தில் மித்ரன் ஐபிஎஸ் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. அவர் பேசிய 'செய்திதாளில் ஆறாவது பக்கத்துக்கும் எட்டாவது பக்கத்துக்கும் உள்ள தொடர்பு பிறகுதான் தெரிஞ்சது' போன்ற வசனங்கள், அவரின் நடிப்பில் தெரிந்த ஒரு முதிர்ச்சி என அனைத்தும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி ரவியை ஆச்சரியம் நிறைந்தவராகக் காட்டிய மோகன் ராஜா, மித்ரனின் எதிரியான சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி) கதாபாத்திரத்தை இன்னும் ஆச்சரியத்துடன் ரசிகர்கள் முன்பு நிறுத்தினார்.
பொதுவாக நம் தமிழ் சினிமாவின் ஓப்பனிங் சீனில் ஹீரோக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஆனால் இப்படத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு மாஸ் ஒப்பனிங் என்று சொல்லலாம். சித்தார்த் அபிமன்யு பிறக்கும் காட்சியே அதகளம். நாளைய எதிர்காலமே என்ற பேனருடன் எம்எல்ஏ காரில் பிறந்தபோது நாம் நினைத்தது ஹீரோ பிறந்துள்ளார் என்று, ஆனால் பிறந்தது சித்தார்த் அபிமன்யு (எ) பழனிச்சாமி.
இப்படத்தில் தனி ஒருவனாக நின்றது சித்தார்த் அபிமன்யு. பதற்றத் தருணங்களில் உதட்டின் ஒரம் பூக்கும் சிரிப்பு, வேகமாக திட்டமிடும் கண்கள், எப்போதும் ஸ்மார்டாக சிந்திக்கும் மூளை, சிறையில் உட்காரும் போதும் கூட கால் நீட்டி உட்கார்ந்திருப்பது, கோட் அணியும்போது ஒருவித ஸ்டைல் என தனது ஒவ்வொரு அசைவிலும் உடல் மொழியிலும் மெர்சல் காட்டியிருப்பார் அரவிந்த் சாமி (சித்தார்த் அபிமன்யு).
இந்தியாவில் இருந்து உலக மாஃபியாக்களை தனது கண் அசைவில் நிறுத்தும் சித்தார்த் அபிமன்யு, படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு போயிருப்பார். பொதுவான தமிழ் சினிமாவில் வில்லன் போல கட்டப் பஞ்சாயத்து, எப்போதும் சுத்தி நிற்கும் அடியாட்கள், வண்டியில் வடக்கும் தெற்கும் சுத்திக் கொண்டு ரவுடிசம் செய்வது, ஹீரோக்களின் புத்திசாலித் தனத்திற்கு முன் தோற்றுப் போவது என அரைச்ச மாவையே அரைக்காமல், வில்லன் படு ஸ்டைலிஷா, ஸ்மார்ட்டா இருக்கலாம் என புது விதியை இதில் அறிமுகப்படுத்தினர்.