'முன்தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க', 'மீகாமன்' ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியுள்ள படம் 'தடம்'. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு அருண்ராஜ் என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். 'தடம்' படத்தின் இசைவெளியிட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் அருண்விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி, இசையமைப்பாளர் அருண்ராஜ், பாடலாசிரியர் மதன்கார்க்கி, நடிகைகள் தன்யா, வித்யா பிரதீப் மற்றும் அறிமுக நாயகி ஸ்ம்ரித்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய அருண்விஜய்," 'தடையற தாக்க' படத்திற்கு பிறகு மகிழ்த்திருமேனியுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக 'தடம்' நல்ல வந்துள்ளது. இப்படத்தில் ரொமான்ஸ், லிப்லாக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று முன்னதாக இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் இயக்குனர் நடிக்க வேண்டும் என்று கூறியதால் நடித்தேன். இப்படி நடித்ததின் விளைவுகளை இன்றும் நான் சந்தித்துக் கொண்டுதான் உள்ளேன்" என்றார்.
இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி, "அருண்விஜய் நடிக்கமாட்டேன் என்று கூறி 12 டேக்குகள் எடுத்து லிப்லாக் சீனில் நடித்துள்ளார். அப்படி நடித்ததோடு மட்டுமல்லாமல் கதாநாயகியின் உதட்டை கடித்து விட்டதால் சென்சாரில் பிரச்னை வந்தது. அவரின் ஆர்வத்தின் காரணமாக அந்த காட்சியை படத்தில் இருந்து எடுக்க வேண்டியதாகி விட்டது" என்று இயக்குநர் கூறியதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலையாக இருந்தது.
மேலும் அவர் கூறியதாவது, பன்முகத்திறமை வாய்ந்த ஒரு நடிகர். தனது திரையுலக நீண்ட பயணத்தில் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் தனது உடலையும், மனதிடத்தையும் அவர் கட்டிக்காத்துள்ளார். இயக்குனரின் மெல்லிய வழிநடத்தல் இருந்தால் இந்த தலைமுறையில் மிகசிறந்த நடிகரில் அருண்விஜயும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்தார்.